வங்கதேச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் எச்.எம்.எர்ஷாத் வீட்டை பாதுகாப்பு படையினர் சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து, அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
வங்கதேசத்தில், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி) தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜாதியா கட்சியும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. ஜாதியா கட்சியின் தலைவர் எச்.எம். எர்ஷாத் 2 நாள்களுக்கு முன் இதனை அறிவித்தார். இது ஆளும் அவாமி லீக் கட்சிக்கு நெருக்கடியை அளித்துள்ளது.
இந்நிலையில் எர்ஷாத் வீட்டை நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து, “பாதுகாப்பு படையினர் என்னை நெருங்கினால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன்” என்று எர்ஷாத் மிரட்டல் விடுத்துள்ளார். எர்ஷாத்துக்கு நிர்ப்பந்தம் அளிக்கவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள் ளதாக அவரது ஜாதியா கட்சி கூறுகிறது.
3வது கட்ட போராட்டம்
இதனிடையே ஜனவரி 5ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3வது கட்ட போராட்டமாக வரும் சனிக்கிழமை காலை முதல் 72 மணி நேர மறியல் போராட்டம் நடைபெறும் என பி.என்.பி. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.