இலங்கை உள்நாட்டுப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர் பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால்தான் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி அவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்நேரத்தில் வடக்கு மாகாண சபை சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அண்மையில் மன்னார் பகுதியில் 44 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாகாண சபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை அமைச்சர் பதில்
இலங்கையின் மூத்த அமைச்சர் சுஷில் பிரேம ஜெயந்தா நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகள் வெடிகுண்டு களை வெடிக்கச் செய்தபோது யாரும் குரல் எழுப்பவில்லை. அந்த தீவிரவாதத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்தோம். அதனால்தான் இப்போது அவர்கள் சுதந்திரமாகப் பேசுகிறார்கள்.