உலகம்

எம்.ஹெச்- 370 தேடல்: உடைந்த பாகங்களை நெருங்கியது சீன விமானம்

செய்திப்பிரிவு

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெள்ளை நிறத்தில், சதுர வடிவிலான ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளதாகவும், அது எம்.ஹெச்-370 விமானத்தின் உடைந்த பாகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 8-ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா புறப்பட்ட எம்.ஹெச்-370 விமானம் திடீரென மாயமானது.

விமானம் குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என கருதப்பட்ட சில செயற்கோள் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

அதன் அடிப்படையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் எம்.ஹெச்.370 விமானத்தின் உடைந்த பாகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளை சீன விமானம் கண்டறிந்துள்ளதாக சீன அரசின் சினுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.எல்-76 சீன விமானம், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

உடைந்த பாகங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொருள் குறித்து ஆஸ்திரேலிய தகவல் மையத்திற்கும், தேடுதல் பணியில் உதவுவதற்காக இந்தியப் பெருங்கடல் நோக்கி விரைந்து சீனாவின் கொண்டிருக்கும் ஸ்னோ டிராகன் கப்பலுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேடுதல் பணியில் ஏற்பட்டுள்ள தற்போதைய தகவல் குறித்து ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பொருள் இருக்கும் இடத்தில் இன்றே தீவிர தேடுதல் நடத்தப்படும். மோசமான வானிலை காரணமாக தேடுதலில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT