தனது அண்டை நாடுகளுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் உட்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:
பாகிஸ்தானின் அண்டை நாடுகளைக் குறிவைத்துச் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் உட்பட அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசின் உயர் நிலை அளவில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
மேலும், தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களையும் மூடச் சொல்லியிருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக மட்டும் பாகிஸ்தான் செயல்படுகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு அச் சுறுத்தல் தராத, மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனது மண்ணில் தீவிரவாதத் துக்கு எதிரான அனைத்தையும் பாகிஸ்தான் செய்யும் என நம்புகிறோம். பாகிஸ்தான் இவ் விஷயத்தில் கூடுதலாகச் செயல் பட வேண்டும். சார்க் போன்ற அமைப்பின் மாநாடுகள் அவசியம் தான். தங்களது பிரச்சினைகளைப் பேசி, புரிந்து ஒத்துழைப்பு நல்க அவை தேவைப்படுகின்றன. தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு பிராந்திய அளவிலான பேச்சு வார்த்தைகளை நாங்கள் வரவேற் கிறோம். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே தீவிரவாதம் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. இருநாடுகளுமே இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.