வங்கதேசத்தில் ஆளும் கூட்டணிக் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அந்த நாட்டில் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிந்தது. பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி தேர்தலைப் புறக்கணித்துள்ளது. அந்தக் கூட்டணியைச் சேர்ந்த 18 கட்சிகளின் சார்பில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த ஜாதியா கட்சியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து கட்சியின் தலைவர் ஹூசைன் முகமது எர்ஷாத் தலைநகர் டாக்காவில் நிருபர்களிடம் கூறியது:
அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்றால்தான் நாங்களும் போட்டியிடுவோம் என்று முன்னரே அறிவித்திருந்தேன். இப்போது எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் ஜாதியா கட்சியும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவார்கள்.
நாடு இப்போது அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் ஸ்திரமின்மையால் அப்பாவி பொதுமக்கள் உயிர்பலியாகி வருகின்றனர். இதுவும் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய அரசை பிரதமர் ஷேக் ஹசீனா அமைத்துள்ளார். அந்த அரசில் ஜாதியா கட்சி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களும் விரைவில் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள் என்று தெரிகிறது.
கலவரத்தில் 34 பேர் பலி
வங்கதேச நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னரும் ஆட்சியில் நீடித்த பிரதமர் ஹேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சாராத மக்கள் பிரதிநிதிகள் குழுவிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. பிரதமர் ஷேக் ஹசீனா இதனை ஏற்க மறுத்து வருகிறார்.
டாக்காவில் ஐ.நா. குழு
இதனிடையே இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஐ.நா. சபை சார்பில் சிறப்பு பிரதிநிதிகள் குழு இப்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. அந்தக் குழுவினர் விரிவான விசாரணை நடத்தி ஐ.நா. பொதுச் செயலரிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.