இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றியும் வீடியோ படத்தை ஒளிபரப்பி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி குழுவினர் வடக்கு மாகாணம் செல்வதை பௌத்த துறவிகள் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
இந்த குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா செல்லும் ரயில் ஒன்றில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகள் செல்வாக்கு பெற்ற பகுதியாக முன்பு விளங்கிய கிளிநொச்சிக்கு அவர்கள் செல்ல திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
வடக்கு மத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இந்த ரயிலை புத்த பிக்குகள் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேனல் 4 தொலைக்காட்சியானது புலிகளின் ஏஜெண்டாக செயல்படுவதாக கூறும் பதாகைகளை ஏந்தியபடி சேனல் 4 டிவிக்கு எதிராக கோஷமிட்டு ரயிலை மறித்தனர். சுமார் 2 மணி நேரம் ரயிலை தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீ ஸார், வடக்கு மாகாணம் செல்லும் திட்டத்தை கைவிட்டு கொழும்புக்கு திரும்ப தொலைக்காட்சி குழுவை சம்மதிக்க வைத்தனர்.
இந்நிலையில் சேனல் 4 டிவி குழுவினரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என சிங்கள தேசியவாத குழுக்கள் சில வலியுறுத்தியுள்ளன.
இந்த குழுவினரை அதிபர் மகிந்த ராஜபட்ச தேநீர் விருந்துக்கு வரும்படி செவ்வாய்க்கிழமை அழைத்ததாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன, காமன்வெல்த் தொழிலதிபர்கள் மாநாட்டுக்கு அதிபர் புறப்பட்டபோது சேனல் 4 டிவி தயாரிப்பாளர் ஜொனாதன் மில்லர் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
போர்க்குற்றம் தொடர்பாக வெளியான சேனல் 4 ஆவணப்படத்தின் (நோ பையரிங் ஸோன்: தி கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா) இயக்குநரான கல்லம் மேக்ரோவும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
மனித உரிமை மீறலில் ஈடுபடு வதாகவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட தாகவும் போலி வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையின் நற்பெயரை குலைப்பதாக சேனல் 4 டிவி மீது அந்த நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.