அமெரிக்க அதிபர் மாளிகை செய்தியாளர் சந்திப்பின்போது முன்னணி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 24-ம் தேதி அமெரிக்க அதிபர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சில முன்னணி ஊடகங் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக அதிபர் ட்ரம்பை விமர்சித்து செய்திகளை ஒளிபரப் பும், வெளியிடும் பிபிசி, சிஎன்என், நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், பொலிடிகோ, பஸ்பீட், கார்டியன் உள்ளிட்ட ஊடகங்களின் நிருபர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஏ.பி., டைம்ஸ் மேகசின் நிருபர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே வாஷிங்டனில் நேற்று நடந்த மாநாட்டில் பேசிய அதிபர் ட்ரம்ப், பெயர் குறிப்பிடாமல் ஊடகங்களை குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது: சில ஊடகங்கள் பொய் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. அவை ஒருபோதும் உண்மையை சொல்வது இல்லை. அதிபர் தேர்தலின்போது வெளியான கருத்துக் கணிப்புகளில் பெரும் பாலானவை பொய்த்துவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.