பாகிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் நாடாளுமன்ற துணை சபாநாயகரும் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில், "பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள மாஸ்டங் நகரில் மசூதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பலூசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் கஃபூர் ஹைதாரியும் காயம் அடைந்தார், இது தற்கொலைப் படை தாக்குதலா என்று தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை" என்றார்.
குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்த ஹைதாரி கூறும்போது, "சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பாக இருந்தது. இந்தத் தாக்குதலில் சிறிய காயங்களே எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
மாஸ்டங் மருத்துவமனை தரப்பில், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.