ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் எதிர்பாராத வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் பயங்கர வாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் லோகார் மாகாணம், சார்க் மாவட்டத்தில் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் 5 பேர் இறந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு சராக் மாவட்ட ஆளுநர் கலிலுல்லா கமல் நேரில் சென்று பார்வையிட்டார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “இப்பகுதி குன்றில் உச்சியில் நேட்டோ படைகள் பயன்படுத்தி வந்த முகாமை, அவர்கள் விட்டுச் சென்ற பின் ஆப்கன் ராணுவ வீரர்கள் பயன்படுத்தி வந்தனர். இம்முகாம் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன” என்றார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணிப் படைக்கும் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இருதரப்பு உறவை மேலும் சிக்கலாக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தர விடப்படுள்ளதாக நேட்டோ கூட்டணிப் படை அறிவித்துள்ளது.