அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்டேலனின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு அடையாளம் காட்டியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிதி மீது புதிதாக கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரா பகுதியைச் சேர்ந்த நசீபா குல் என்ற பெண் அளித்த புகாரில், 2007-ம் ஆண்டில் டாக்டர் ஷகீலின் கிளீனிக்கில் எனது மகன் சல்மான் அப்ரிதிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. டாக்டர் ஷகீல் அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. அவரது தவறான அறுவைச் சிகிச்சையால் எனது மகன் உயிரிழந்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர் போலீஸில் இந்த புகாரை அளித்திருந்தார்.
அதன்பேரில் போலீஸார் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரண்ட், பெஷாவர் சிறையில் உள்ள டாக்டர் ஷகீலிடம் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்டேலனின் இருப்பிடத்தை அமெரிக்க ராணுவத்துக்கு அவர் அடையாளம் காட்டியதன்பேரில் 2011 மே 2-ம் தேதி அமெரிக்க கடற்படை வீரர்கள் பின்லேடன் வீட்டுக்குள் புகுந்து அவரை சுட்டுக் கொன்றனர்.
இதைதொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ஷகீலுக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.