வாடிகன் சதுக்கத்தில் நேற்று நடந்த சிறப்பு பிரார்த்தனையில், அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட்டார். முறைப்படியாக இதற்கான அறிவிப்பை போப் பிரான்சிஸ் வெளியிட்டார். லட்சக்கணக்கான பக்தர்கள் சதுக்கத்தில் கூடி அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்தனர்.
அல்பேனியாவில் கடந்த 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தவர் அன்னை தெரசா. கத்தோலிக்க மதத்தை சேர்ந்த அவர் இளம் வயதிலேயே துறவறம் பூண்டார். கடந்த 1929-ம் ஆண்டு இந்தியாவில் சேவை செய்ய வந்த அவர் கொல்கத்தாவில் வீடில்லாதவர்கள், மரண தருவாயில் ஆதரவின்றி இருந்தவர்கள், தொழுநோயாளிகள், காசநோயாளிகளின் நலனுக்காக சேவை செய்யத் தொடங்கினார்.
அதன்பின் கொல்கத்தாவில் கடந்த 1950-ம் ஆண்டு ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ என்ற சேவை அமைப்பை தொடங்கி தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவைபுரிவதை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.
அவர் ஆற்றிய சேவைகளை கவுரவிக்கும் வகையில், கடந்த 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு இந்தியா வின் உயரிய பாரத ரத்னா விருது வழங் கப்பட்டது. உலகம் முழுவதும் மக்கள் மன தில் நீங்கா இடம்பெற்ற அன்னை தெரசா, 1997 செப்டம்பர் 5-ம் தேதி காலமானார்.
அதன்பின், கத்தோலிக்க மதத்தில் உள்ள புனிதர்களுடன் (செயின்ட்ஸ்) அன்னை தெரசாவையும் சேர்க்க வேண் டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஒருவர் இறந்த பிறகு அவரை புனிதராக அறிவிக்க 2 அற்புதங்கள் நடந்திருக்க வேண் டும் என்பது விதி முறை. அதன்படி, கொல்கத்தாவை சேர்ந்த மோனிகா என்ற இளம்பெண், தனது வயிற்றில் இருந்த புற்று நோய் அன்னை தெரசாவால் குண மானதாக தெரிவித் தார். பின்னர் பிரே சில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த இளைஞர் மார்சிலோ ஹதாத் ஆன்டிரினோ, அன்னை தெரசா வின் அருளால் குணமானதாக கூறினார். தனது மனைவி அன்னை தெரசாவை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தான் குணமானதாக கூறியிருந்தார்.
இந்த 2 அற்புதங்களையும் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். அதற்கேற்ப, வாடிகன் சதுக்கத்தில் நேற்று அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப் பட்டது. போப் பிரான்சிஸ் முறைப்படி அன்னை தெரசாவை புனிதராக பிரகட னம் செய்தார். அவர் கூறும்போது, ‘‘ஆசிர் வதிக்கப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அன்னை தெரசா இனி புனிதராக இருப் பார். கத்தோலிக்க புனிதர்களின் வரிசை யில் இனிமேல் அன்னை தெரசாவும் இடம்பெறுவார்’’ என்று அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 13 நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள், உலகம் முழுவதும் உள்ள ஆர்ச் பிஷப்கள், பிஷப்கள், கர்தினால்கள், பாதிரியார்கள், சகோதரிகள் பங்கேற்றனர்.
ரோம் நகரில் மட்டுமன்றி கொல்கத்தாவில் உள்ள தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி இல்லத்திலும் பல தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதேபோல் டெல்லி உட்பட பல மாநிலங்களிலும் ஏழைகளுக்கு உணவுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிரணாப், மோடி பெருமிதம்
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கியது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பெருமிதம் அடைந்துள்ளனர்.
‘‘அன்னை தெரசா போல் நாம் எல்லோரும் இந்த மனித குலத்துக்கு அர்ப்பணிப்புடன் சேவை புரிபவர்களாக இருக்க வேண்டும்’’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அங்கிருந்து அவர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது மறக்க முடியாத, பெருமிதமான தருணம்’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின்போது அன்னை தெரசாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அந்த வீடியோவையும் ட்விட்டரில் அவர் இணைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கூறும்போது, ‘‘அன்னை தெரசாவின் கருணை, பொறுமை, அன்பு ஆகிய குணங்கள் நம் எல்லோருக்கும் தூண்டுதலாக இருக்கும். அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. அதற்கு கிடைத்த அங்கீகாரம்தான், இன்று அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட்டது’’ என்றார்.
சுஷ்மா பங்கேற்பு
வாடிகனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 பேர் பங்கேற்றனர். அதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், மக்களவை எம்.பி.க்கள் கே.வி.தாமஸ், கே.மணி, ஆன்டோ அந்தோணி, கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா ஆகியோரும் அடங்குவர்.
மலை ரயில் பயணம்
கடந்த 1946-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் சேவை செய்ய அன்னை தெரசா மலை ரயிலில் (டாய் டிரெயின்) பயணம் செய்தார். அதை நினைவுகூரும் வகையில், டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே அதிகாரிகள், நேற்று மலை ரயிலை மீண்டும் இயக்கினர். அதில், மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் டார்ஜிலிங் கிளை சகோதரிகள் 8 கி.மீ. பயணம் செய்தனர்.
இந்தியாவுக்கு வந்த பிறகு தொடக்க காலத்தில் டார்ஜிலிங் பகுதியில்தான் அன்னை தெரசா ஏழைகளுக்கு சேவை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலைக்கு பெயர்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சத்யா நகர் மற்றும் கட்டாக் பூரி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலைக்கு, அன்னை தெரசா பெயர் நேற்று சூட்டப்பட்டது.
நினைவு தபால்தலை
புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய தபால் துறை நேற்று அன்னை தெரசா நினைவு தபால் தலை வெளியிட்டது. மும்பை டிவைன் சைல்ட் பள்ளியில் நடந்த விழாவில், மத்திய தகவல்தொடர்பு துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா, தபால்தலையை வெளியிட்டார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், குமார் விஸ்வாஸ்.