ஃபிஜி நாட்டின் கூட்டு மின் திட்டம், கிராமப்புற மேம்பாடு ஆகிய பணிகளுக்கு 75 மில்லியன் டாலர் ( சுமார் 450 கோடி ரூபாய்) நிதி உதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான ஃபிஜி நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது 10 நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளாக இன்று (புதன்கிழமை) சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பிராங் பைனிமராமா வரவேற்றார்.
1981-ஆம் ஆண்டு பின்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு 33 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஃபிஜி நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஃபிஜி நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "ஃபிஜி நாடாளுமன்றத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பை எனக்கு அளிக்கபட்ட பரிசாக பார்க்கிறேன். நமது இரு நாடுகளிலும் பெண் சபாநாயகர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, ஃபிஜி இந்தியாவைவிட அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஃபிஜி நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் 9-ல் ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் இங்கு 7-ல் ஒரு உறுப்பினர் பெண்ணாக உள்ளார்.
சில நேரங்களில் ஃபிஜி மக்களுக்கு இந்திய தூதரகத்தை நாடுவது மருத்துவமனைக்கு செல்வதை விட சிரமமானதாக எண்ணி இருக்கலாம். ஆனால் இந்த நிலை தற்போது மாறியுள்ளது. வெளி நாட்டவர்களுக்கான விசா ஒழுங்குமுறைகள் அனைவரும் பலன் பெரும் வகையில் இனி அமையும்" என்றார்.
இதனை அடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பிரதமர் பிராங்க் பைனிமாரமாவிடம் இரு நாட்டு கொள்கைகள் குறித்து பேசினார். அப்போது, ஃபிஜி நாட்டின் கூட்டு மின்சாரத் திட்டத்துக்கு 75 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூபாய்) கடன் உதவி அளிக்கப்படும் என்றும் மேலும் கிரமாங்களை மேம்படுத்த 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவரிகள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்.