உலகம்

சி.என்.என். நிருபரிடம் ‘நீங்கள் பொய் செய்திகளை வெளியிடுபவர்கள்’ என்று சீறிய ட்ரம்ப்

செய்திப்பிரிவு

தனக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவு பற்றிய தகவல்களை கசிய விட்டதற்காக நாட்டின் உளவுத்துறையையும், அதனையொட்டி ‘பொய்ச் செய்திகளை’ வெளியிட்டதாக ஊடகங்களையும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ரஷ்ய ஏஜென்சிகள் சிலவற்றினால் தான் விலைமாதர்களுடன் இருந்ததாக பிடிக்கப்பட்ட படம் பற்றிய செய்திகளை தனியார் அரசியல் ஆலோசகரிடமிருந்து உளவுத்துறைகள் வாங்கியதையும், ட்ரம்ப் மற்றும் அவரது ஊழியர்கள் தேர்தல் பிரச்சார காலக்கட்டங்களில் ரஷ்ய ஏஜெண்ட்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாகவும் சூசகமாக தெரிவிக்கும் செய்திகளை வெளியிட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப், “இதை அவர்கள் செய்திருந்தால் அவர்கள் மீது விழுந்த கறுப்புக் கரையே” என்றார்.

“இப்படிப்பட்ட விஷயங்கள் எழுதப்பட்டிருக்கக் கூடாது, அதனை வெளியிட்டிருக்கவும் கூடாது” என்று கூறிய ட்ரம்ப், இத்தகைய செய்திகளை வெளியிட்ட சி.என்.என்., பஸ்ஃபீட் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார்.

சி.என்.என். நிருபரிடம், “நீங்கள் பொய்ச் செய்தியாளர்கள்” என்று நேரடியாகவே சாடினார்.

முன்னதாக, ட்ரம்ப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய ஏஜெண்டுகளுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனரா, இதற்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதிலளிக்குமாறு வலியுறுத்தப்பட்டதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்ஃபீட் ஊடகம் பற்றி ட்ரம்ப் சாடும் போது, “குப்பைகளின் குவியல்” என்று வர்ணித்தார்.

ஆனால் ஜனநாயகக் கட்சியின் கணினி நெட்வொர்க்கை ஹேக் செய்தது ரஷ்யாதான் என்று ட்ரம்ப் வெளிப்படையாக முதன் முதலில் ஒப்புக் கொண்டார்.

‘ஹேக்கிங்கைப் பொறுத்தவரை, ரஷ்யாதான் செய்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். ஆனால் “மற்ற நாடுகளும் ஹேக் செய்துள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.

புதினுக்கு உங்கள் செய்தியென்ன என்று கேட்ட போது, “அவர் இதனைச் செய்திருக்கக் கூடாது, அவர் செய்திருக்க மாட்டார். என் தலைமையில் நம் நாட்டின் மீது ரஷ்யாவுக்கு கூடுதல் மரியாதை பிறக்கும். ஆனால் ஹேக் செய்தது ரஷ்யா மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதைப் பார்த்தோமானால், நீங்கள் இதே பாணியில் மற்ற ஹேக்கிங்குகள் பற்றி செய்தி வெளியிட மாட்டீர்கள், சீனா நம் நாட்டின் 22 மில்லியன் கணக்குகளை ஹேக் செய்துள்ளது, காரணம் நம்மிடையே பாதுகாப்பு இல்லை. ஏனெனில் இதுநாள் வரை ஆட்சி செய்தவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்கள்” என்றார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ருபியோ ரஷ்ய அதிபர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என்று கூறியதை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரெக்ஸ் டில்லர்சன் ஏற்கவில்லை.

அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் குறுக்கிட்டதற்காக ரஷ்யா மீது ஒபாமா சில புதிய தடைகளை அறிவித்திருந்தார். இந்தத் தடைகளின் தன்மையையும் மறுபரிசீலனை செய்யப்போவதாக டில்லர்சன் தெரிவித்தார்.

மற்றொரு குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரகாம் ரஷ்யா மீது மேலும் வலுவான தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரலை கடுமையாக மறுத்த ட்ரம்ப், “லிண்ட்சே கிரகாம் என்னுடன் சில காலமாக போட்டிபோட்டு வருகிறார். 1% ஆதரவு நிலையிலிருந்து அவர் முன்னேறி விட்டார் என்று தெரிகிறது” என்று ரஷ்யாவுக்கு வலுவான தடைகள் இருக்காது என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT