ஊழல் புகார் தொடர்பான அரசியல் சாசன நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக தென்கொரிய அதிபர் பார்க் கியுன்-ஹை மறுத்துவிட்டார்.
தென்கொரிய அதிபர் பார்க் கியுன்-ஹை, தனது தோழி சோய் சூன்-சில் உடன் சேர்ந்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, முன்னணி தொழில் நிறுவனங்களிடம் பல கோடி டாலர் மிரட்டிப் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு நிர்வாகத்தில் தலையிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தோழி ஏற்கெனவே கைது செய்யப் பட்ட நிலையில், அதிபர் பார்க்கை விசாரணைக்கு உட்படுத்த கடந்த மாதம் தென்கொரிய நாடாளு மன்றம் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இவ்விவ காரம் தொடர்பாக விசாரிக்கும், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன நீதிமன்ற அமர்வு குற்றச் சாட்டு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிபர் பார்க்கை கேட்டுக்கொண்டது.
ஆனால், நேற்று நீதிமன்றத்தின் முன் ஆஜராக அதிபர் பார்க் மறுத்துவிட்டார். வரும் 5-ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகு மாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அதிபரை விசாரணைக்கு ஆஜராக தங்களால் கட்டாயப்படுத்த முடியாது. எனினும், 2-வது முறை யில் அதிபர் ஆஜராக மறுத்தால், அவர் இல்லாமலேயே வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டி யிருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிபர் பதவியில் இருந்து பார்க் விலக வேண்டுமா அல்லது தொடரலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். ஒருவேளை பார்க் பதவியில் இருந்து விலக்கப்பட் டால், 60 நாட்களில் புதிய அதிபருக் கான தேர்தல் நடக்கும்.