உலகம்

வந்த கதை, நொந்த கதை!

செய்திப்பிரிவு

இது ஆட்சிக் கவிழ்ப்பு வல்லுநர்கள் நீதி மன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டிய காலம் போலிருக்கிறது.எகிப்துக்கு ஒரு மோர்ஸி என்றால் பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப்.

2007-ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீஃபைப் பதவி நீக்கம் செய்து, தேசத்தின் சிஇஓ-வாகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்து பிறகு அதிபராகவும் அறிவித்துக் கொண்டதெல்லாம் பழைய கதை. பதவி போன பிற்பாடு முஷாரஃப் படுகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அப்படிச் சொல்வதுகூடத் தவறு. அவர் லண்டனுக்கு சென்று தங்கியிருந்தவரைக்கும் அவர்மீதான வழக்குகள் பேப்பரளவில்தான் உயிர்த்திருந்தன. எப்போது ஜனநாயகக் காவலராகப் புதுப்பிறப்பு எடுக்கலாம் என்று முடிவு செய்து கட்சி அரசியல் பேட்டையில் கால் வைத்தாரோ அன்று பிடித்தது அஷ்டமத்துச் சனி.

கடந்த மார்ச்சில் அவர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பியதுமே அவர் மீதான வழக்குகள் அனைத்தும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. தோற்றுவாயே மிரட்டலாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்களோ என்னமோ. அவர் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர் என்று வந்த சூட்டிலேயே நீதிமன்றம் சொல்லி வீட்டில் உட்கார வைத்தது.

மட்டுமல்லாமல் 2007ல் (புரட்சிக் காலகட்டம்) அவர் நீதிபதிகளையெல்லாம் கைது செய்தார்; அது பஞ்சமாபாதகத்துக்கு அடுத்த லெவலில் வருவது என்று சொல்லி வீட்டிலேயே சிறை வைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஒருவேளை இது பத்தாமல் போய்விடுமோ என்று அஞ்சி பேனசிர் புட்டோ படுகொலையிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கொசுறு சேர்த்தார்கள். எல்லாம் அரசியல். நீதியாவது மண்ணாங்கட்டியாவது? ஆட்சியில் இருப்பவர் நவாஸ் ஷெரீஃப். முஷாரஃபின் ஜென்ம விரோதி. அவர் வேறென்ன செய்வார், வேறெப்படி நடந்துகொள்வார் என்று முஷாரஃபின் ஆதரவாளர்கள் கேட்டார்கள்.

தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் வந்த முஷாரஃப் கடந்த ஏப்ரல் முதல் வீட்டுச் சிறையில்தான் இருந்தார். ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கும். மறு வழக்கு உடனே எகிறி வந்து நிற்கும். கண்ணாமூச்சி ஆட்டம்தான். ஆண்ட காலத்தில் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் எழுபது வயதுக்கப்புறம் பதில் மரியாதை கிட்டுமென்று அவர் எண்ணியிருக்க மாட்டார். தள்ளாத வயதில் எல்லாமே சோதனை.

இன்றைக்கு (டிசம்பர் 24) முஷாரஃபின் மீது இன்னொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தை முடக்கி வைத்துவிட்டு, அரசியல் சாசனத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆட்சியைக் கலைத்துவிட்டு, எமர்ஜென்சி கொண்டு வந்து அதிகாரத்தைப் பிடித்த 2007 காலச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, வழக்காடவிருக்கிறார்கள்.

அதாவது ராணுவப் புரட்சி செய்தது தவறு என்று வழக்கு. பாகிஸ்தான் சரித்திரத்தில் ஒரு ராணுவப் புரட்சியாளரைப் புரட்சிக்காகக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துவது இதுவே முதல்முறை.

இதெல்லாம் என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று யாரும் கேட்டுவிட முடியாது. முஷாரஃப் என்கிற மனிதர் இனி உயிருடனோ அல்லது பாகிஸ்தானிலோ இருக்கிற வரைக்கும் இம்மாதிரியான வழக்கு விசாரணைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர் லண்டனிலேயே சௌக்கியமாக செட்டில் ஆகி சொச்ச காலத்தை நினைவுக் குறிப்புகள் எழுதிக் கழிக்க முடிவு செய்திருந்தால் நவாஸ் ஷெரீஃப் ஒன்றும் செய்ய மாட்டார். அரசியலுக்கு வருகிறேன், தேர்தலில் நிற்கிறேன் பேர்வழி என்று களத்தில் இறங்கும்போதுதான் அவர் கலவரமாகிவிடுகிறார்.

திரும்பவும் பாகிஸ்தானுக்கு வருவது என்று முஷாரஃப் எடுத்த முடிவு, உண்மையில் மிகவும் அபாயகரமானது. நவாஸ் ஷெரீஃபும் நீதிமன்ற வழக்குகளும் மட்டும் அவருக்குப் பிரச்னை இல்லை. தாலிபன்கள் முஷாரஃபின்மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். என்றைக்கு இருந்தாலும் உனக்கு எங்களால்தான் சாவு என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி இருதரப்பு அன்புக்கு இடையே சிக்கிக்கொள்ள ஒரு மனிதர் வேண்டி விரும்பி விமானமேறி வருவாரா என்றால், முஷாரஃப் வருவார்! தனக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கும் என்று அவர் நம்புவதே இதன் முதன்மையான காரணம். ஒரு தேர்தல். ஒரு வாய்ப்பு. போதும். தன்னை நிரூபித்துவிடலாம் என்று அவர் நினைக்கிறார்.

அதற்குத்தான் தண்ணி காட்டுகிறார் நவாஸ் ஷெரீஃப். நீ பாகிஸ்தானிலேயே இருப்பதில்கூடப் பிரச்னை இல்லை; தேர்தல் பக்கம் வந்துவிடாதே என்கிறார். இந்த ஆட்டம் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.

SCROLL FOR NEXT