உலகம்

பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்பு நடத்த 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

பிடிஐ

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, இரண்டாவது பொதுவாக்கெடுப்பு கோரும் மனுவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது 2-வது பொதுவாக்கெடுப்பு கோரி மனு ஒன்றில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றம் இதனை விவாதித்தாக வேண்டும்.

வியாழனன்று நடந்த பொதுவாக்கெடுப்பில் 72% வாக்களிக்க, அதில் 52% ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக ஆதரவாக வாக்களித்தது ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்தது.

தற்போது 2-ம் வாக்கெடுப்புக்கான கோரிக்கை மனுவை வில்லியம் ஆலிவர் ஹீலி என்பவர் தொடங்கி வைக்க இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து வில்லியம் ஆலிவர் ஹீலி கூறும்போது, “75% க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் வெளியேறுவதற்கு ஆதரவாக 60%க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கும் போது 2-ம் பொது வாக்கெடுப்ப்பு நடத்த விதிமுறையை அமலாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நாங்கள் உருவாக்கி அதன் கீழ் கையெழுத்திட்டுள்ளோம்” என்றார்.

நாடாளுமன்ற கோரிக்கை மனு இணையதளம் ஒரு நேரத்தில் முடங்கியது, காரணம் பலரும் தங்கள் பெயர்களை இந்த 2-வது பொதுவாக்கெடுப்பு விண்ணப்பத்தில் சேர்க்க முட்டி மோதினர்.

ஆனால், 2-வது வாக்கெடுப்புக்கான விதிமுறை மாற்றத்துக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைக்குமா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான பொதுவாக்கெடுப்பின் போதும் இரண்டாம் பொதுவாக்கெடுப்பு கோரப்பட்டது.

தற்போது ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து ‘லண்டிபெண்டன்ஸ்’ அல்லது பிரிட்டன் தலைநகர் லண்டன் ஒரு தனி ஸ்டேட் என்று கோரும் லண்டன் மேயர் சாதிக் கானின் கோரிக்கை மனுவிலும் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுவின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் ஓ மாலே கூறும்போது, “தலைநகர் லண்டன் என்பது உலக நகரம், அது ஐரோப்பாவின் இருதயத்தில் இருக்க வேண்டும்” என்றார்.

லண்டன்வாசிகளில் 60%க்கும் மேலானோர் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆனால் பர்மிங்ஹாம், கோவெண்ட்ரி உள்ளிட்ட மற்ற பிரிட்டன் நகர மக்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பெருமளவு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT