உலகம்

48 ஆண்டுக்கு முன்பு நிலா மண் கொண்டு வந்த பை ஏலம்

பிடிஐ

நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் நீல் ஆம்ஸ்ட்ராங். அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான அவர், கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு ‘அப்பல்லோ 11’ எனும் விண் வெளிக் கூடத்தில் பயணம் மேற் கொண்டு, நிலவில் மனிதனின் முதல் காலடியைப் பதித்தார்.

அப்போது, அங்கிருந்து 500 கிராம் எடையுள்ள மண், தூசி, 12 சிறு வகையான கற்கள் போன்றவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வந்தார். வெள்ளை நிறத்திலான அந்த பையை கடந்த 2014-ம் ஆண்டு ஏலமிட்ட ஒரு சிறிய நிறுவனத் தின் முயற்சிக்குப் பலன் கிடைக்க வில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பை ஏலமிடப்பட்டபோது, அதனை நான்சி கார்ல்சன் என்பவர் ரூ.65 ஆயிரத்துக்கு வாங்கினார்.

அதன்பின்னர், இந்தப் பையைப் பற்றிய தகவலை அறிவதற்காக அதனை நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு அவர் அனுப்பி வைத்தார். இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அந்தப் பையில் படிந்திருந்த தூசு கள் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட படிமங்கள்தான் என் பதை உறுதி செய்தனர். மேலும், அந்தப் பையில் எழுதப்பட்டிருந்த ‘லூனார் சாம்பிள் ரிட்டர்ன்’ என்பதை ‘அப்பல்லோ 11’ விண்வெளிக் கூடத் தகவலுடன் ஒப்பிட்டும் உறுதி செய்தனர்.

இதையடுத்து, அந்தப் பையை ‘சாத்தபீஸ்’ எனும் பிரபல ஏல நிறுவனம் ஏலம் விட முடிவு செய் துள்ளது. வரும் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் அந்தப் பை ரூ.26 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி ‘அப்பல்லோ 11’ விண்வெளிக் கூடம் நிலவில் இறங்கிய ஆண்டுவிழாவைக் கருத்தில் கொண்டு, ஏலத் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT