நீஸ் நகர தாக்குதலின்போது தியாவா பேனர் என்ற பெண் தனது 8 மாத குழந்தையைத் தவறவிட்டுவிட்டார். தாக்குதல் நடந்தபோது சிதறி ஓடியதில் தாயும் குழந்தையும் பிரிந்துவிட்டனர்.
இதைத்தொடரந்து தியாவா தன் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, “எனது 8 மாத குழந்தையைக் காண வில்லை. நீஸ் நகர நண்பர்கள் இக்குழந்தையைப் பார்த்தாலோ, உங்கள் பாதுகாப்பில் வைத்திருந் தாலோ என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந் தார். இந்த நிலைத்தகவல் உடனடியாக 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில், தனது குழந்தை கிடைத்துவிட்டதாக பேஸ்புக் மூலம் தியாவா தெரிவித்திருந்தார்.
நீஸ் நகர தாக்குதல் குறித்த தகவல் வெளியானதும், பேஸ்புக் நிறுவனம் ‘சேப்டி செக்’ வசதியை திறந்து வைத்தது. பேரிடர் காலங்களில் இந்த வசதியை திறந்து வைப்பதன் மூலம், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இதில் பதிவு செய்ய முடியும். அந்த தகவல், அவரின் தொடர்பில் உள்ள அனைவருக்கும் சென்று சேர்ந்துவிடும்.
கடந்த ஒரு மாதத்துக்குள் பேஸ்புக் நிறுவன சேப்டி செக் வசதியை திறந்து வைப்பது இது மூன்றாவது முறையாகும். புளோரிடா தாக்குதல் சம்பவம், இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் சம்பவங்களின்போது இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் செயல்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.