உலக கோடீஸ்வரர்களின் புதிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.
இப்பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள 101 இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார்.
'உலக கோடீஸ்வரர்கள்' 2017 பட்டியலிலுள்ள 2,043 நபர்களின் பெயரை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்ட புதிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முதல் முறையாக இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட தனி நபர்கள் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர்.
மேலும் போர்ப்ஸ் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் 64வது இடத்திலும் (சொத்து மதிப்பு 15.4 பில்லியன் டாலர் ), இந்தியாவில் பிறந்த வெளிநாடு வாழ் தொழிலதிபரான பல்லோன்ஜி மிஸ்திரி 77வது இடத்திலும் (சொத்து மதிப்பு 14.3 பில்லியன் டாலர்) உள்ளனர்.
இண்டோரமா துணை நிறுவனர் ஸ்ரீ பிரகாஷ் லோகியா 288- வது இடத்தில் உள்ளார் (இவரின் சொத்து மதிப்பு 5.4 பில்லியன் டாலர் )
இந்தப் பட்டியலில் இந்திய பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு 33-வது இடம் (சொத்து மதிப்பு 23.2 பில்லியன் டாலர்) கிடைத்துள்ளது. அவரது சகோதரர் அனில் அம்பானி 745- வது (சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர்) இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஸ்டீல் குழும தலைவர் லட்சுமி மிட்டல் 56-வது இடத்தில் உள்ளார்.
பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள்
போர்ப்ஸ் வெளியிட்ட கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் நான்கு இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஓ.பி. ஜிண்டால் நிறுவனத் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 303-வது இடத்தில் உள்ளார் இவரின் சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர் ஆகும்.
இவருக்கு அடுத்து கோத்ரெஜ் நிறுவனத்தின் ஸ்மிதா கிரிஸ்னா 814-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா 973-வது இடத்திலும், யுஎஸ்வி நிறுவனத்தின் தலைவர் லீனா திவாரி 1030-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப்பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி, பேடைம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோரும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பேடைம் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து போர்ப்ஸ் பத்திரிகை தரப்பில் "இந்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்தியபோது பேடைம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பலனடைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
பட்டியலிலுள்ள முதல் 3 நபர்கள்:
போர்ப்ஸின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து 4வது முறையாக முதலிடத்தில் உள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் 18 ஆண்டுகளாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
பில்கேட்ஸ்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலர். கடந்த ஆண்டில் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலராக இருந்தது.
பில்கேட்ஸுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் பிரிக்ஷிர் ஹாத்வே நிறுவனர் வாரன் பஃபே இருக்கிறார் இவரின் சொத்து மதிப்பு 75.6 பில்லியன் டாலர் ஆகும்.
மூன்றாவது இடத்தில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 72.8 பில்லியன் டாலர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தப் பட்டியலில் 544வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் முதல் முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கடந்த 12 மாதங்களில் 11.4 பில்லியன டாலர் அதிகரித்துள்ளது.
போர்ஃப்ஸ் வெளியிட்ட பட்டியலில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில், 565 கோடீஸ்வரர்களைக் கொண்டு அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், சீனா (319), ஜெர்மனி (114) முறையே 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளன.