சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றுத் தான் செல்போன் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக அமெரிக்க உளவுத் துறையான என்.எஸ்.ஏ. தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியில், தினமும் 500 கோடி செல்போன் உரையாடல்களை என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக தெரிவித்திருந்தது. அமெரிக்கர்கள் மட்டுமின்றி, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுவதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் என்.எஸ்.ஏ. செய்தித் தொடர்பாளர் வாணி வின்ஸ் கூறுகையில், “ஒவ்வொரு செல்போனையும் கண்காணிப்பதும், அதன் மூலம் அதை வைத்திருப்போர் எங்கிருக்கின்றனர் என்பதை கண்டறிவதும் இயலாத காரியம். எனவே, இந்த கண்காணிப்பு பணியை உலகம் முழுவதும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
மிகவும் அபாயகரமான பகுதிகளில், குறிப்பாக போர் நடைபெறும் பகுதிகள், தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே நாங்கள் செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல்களை சேகரித்து கண்காணிப்பில் ஈடுபடுகிறோம்.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் உரையாடல்களை பதிவு செய்து கண்காணிக்கிறோம்.வெளிநாட்டு உளவு கண்காணிப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் செல்போன் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கிறோம்.
உள்ளூர் செல்போன் அழைப்புகளை அவ்வளவாக நாங்கள் கண்காணிப்பது இல்லை. வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை மட்டுமே முக்கியத்துவம் அளித்து கண்காணிக்கிறோம்.
இதுபோன்று உலகளாவிய செல்போன் கண்காணிப்பை அதிபர் மாளிகையின் செயல் ஆணை எண் 12333-ன் படி மேற்கொள்கிறோம்” என்றார்.