பாதுகாப்பு காரணங்களைக் கருதி, அணு உலையை மூட ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அணு உலை நிர் வாகத்தின் மேல்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
டகஹாமா அணு உலை பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஒட்ஸு மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் 9-ம் தேதி, கன்சாய் எலக்ட்ரிக் நிறுவனத்தால் இயக்கப்படும் அணு உலையில் 3-வது அலகு செயல்படக்கூடாது எனக் கூறி தடை விதித்தது. வழக்கு நடைபெற்ற சமயத்தில் அந்த அணு உலையின் 3-வது அலகு மட்டும்தான் செயல்பட்டு வந்தது.
நீதிமன்றம் தனது உத்தரவில், அந்த அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அவசர நிலை உப கரணங்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. மேலும், சுனாமி போன்ற தருணங்களின் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், வெளியேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து அணு உலையை நிர்வ கித்து வந்த கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், தனது முந்தைய உத்தரவை உறுதி செய்த நீதின்றம் அணு உலையை மூட உத்தரவிட்டுள்ளது.
அணு உலையை மூடும்படி நீதிமன்றம் உத்தரவிடுவது இது முதல்முறையாகும். புகுஷிமா விபத்துக்குப் பின் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு, புதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த பிறகே இயங்க அனுமதிக்கப்படுகின்றன.