இலங்கை அரசு தயாரித்து வரும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்பேன் என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சட்ட வரைவு உட்பட இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜபக்ச பேசியதாவது:
தங்களுக்கு அதிகாரப் பகிர்வு (அரசியல் சுதந்திரம்) வழங்க வேண்டும் என்று கோரி வரும் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில் புதிய அரசியல் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மோசடியான இந்த சட்ட வரைவை நாம் கடுமையாக எதிர்ப்போம்.
நான் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்திற்கு ஏராளமானோர் வந்திருப்பதைப் பார்க்கும்போது, நீங்களும் புதிய சட்டத்தை விரும்பவில்லை என்றே நான் கருதுகிறேன். கடந்த 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக நாம் பெற்ற வெற்றியை இந்த புதிய சட்டம் அச்சுறுத்தலாக அமையும். எனவே, நமது ராணுவம் பெற்ற இந்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தங்களது கருத்துகளை அரசு பரிசீலிக்காவிட்டால், புதிய அரசியலமைப்பு சட்டம் தயாரிப்பது தொடர்பான நடைமுறையில் பங்கேற்க மாட்டோம் என தமிழர் தேசிய கூட்டமை ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.