பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக பராக் ஒபாமா கொண்டு வந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இதனால் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், இதற்கு அமெரிக்கா தொடர்ந்து தலைமை தாங்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நிலக்கரி தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க நடவடிக்கை எடுப்பேன் என ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (இபிஏ) அலுவலகத்தில் ஒரு புதிய உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் வளம் திருடப்படுவது தடுக்கப்பட்டு வருவதுடன், நமது அன்புக்குரிய நாட்டை மறுநிர்மாணம் செய்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக பருவநிலை மாற்றம் தொடர்பாக முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த அனைத்து கொள்கைகளையும் ரத்து செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். நமது எரிசக்தியை (நிலக்கரி) பயன்படுத்துவதற்காக நீடித்து வந்த கட்டுப்பாட்டை தளர்த்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை தியாகம் செய்யாமலேயே, தூய்மையான காற்று மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய இந்த புதிய உத்தரவு உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு எரிசக்தி உற்பத்திக்கு தடையாக உள்ள விதிமுறைகள், நடவடிக்கைகள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மறுபரிசீலனை செய்ய இந்த உத்தரவு வகை செய்கிறது.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ‘2015 பாரிஸ் உடன்படிக்கை’ பற்றி இந்த புதிய உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த உத்தரவு பாரிஸ் உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.