பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த அனில்குமார் என்ற மருத்துவர், கராச்சி நகரின் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அனில்குமார் (32) என்ற மருத்துவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கராச்சி மருத்துவமனையின் ஐ.சி.யூ. பிரிவு அறையில் நாற்காலியில் இறந்த நிலையில் கிடந்ததாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “நீண்ட நேரமாகியும் அனில்குமாரின் அறைக்கதவு திறக்கப்படாததால் மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து திறந்துள்ளனர். அங்கு அனில்குமார் நாற்காலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அனில்குமாரின் அருகில் ஊசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அனில்குமாரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம் இந்து மதத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.