லிபியாவின் ராணுவ மருத்துவ சேவை விமானம் துனிசியாவின் தெற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 11 பேரும் பலியாயினர். இதுகுறித்து துனிசியா நெருக்கடி கால சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
லிபியாவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் துனிசியா வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ராடார் கண்காணிப்பிலிருந்து மாயமாகி உள்ளது. உடனடியாக என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளதாக துனிஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், துனிசியா தலைநகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள குரோம்பலியா பகுதியிலுள்ள நியானவ் கிராமம் அருகே வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நெருக்கடி கால சேவைப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது விமானம் முழுவதும் எரிந்து சேதமடைந்திருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 மருத்துவர்கள், 2 நோயாளிகள் மற்றும் 6 ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேரின் சடலங்களையும் கருகிய நிலையில் மீட்டனர். இந்த விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, அதிலிருந்த கறுப்புப் பெட்டியை தேடி வருகிறோம் என்றார்.