துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
துருக்கியில் சிரியா எல்லையை ஒட்டிய காஸியன்டெப் பகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு நேற்று இரவு 8 மணி அளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணி) திருமண விழா நடைபெற்றது. அந்தப் பகுதி வழக்கப்படி மணமக்கள் மற்றும் உறவினர்கள் தெருவில் நடனமாடி கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 30 பேர் உயிரிழந்தனர். மணமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
துருக்கியில் சிரியா எல்லையை ஒட்டிய பகுதிகளில் 1.4 கோடி குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இது துருக்கி மக்கள் தொகையில் 18 சதவீதம் ஆகும். அப் பகுதியின் பிரதான கட்சியாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி செயல்படுகிறது. ஆனால் அந்த கட்சியை துருக்கி அரசு தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்துள்ளது.
சிரியா, இராக்கில் வாழும் குர்து இன மக்களுக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியில் வாழும் குர்து இன மக்களை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.