உலகம்

வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் 7-ம் தேதி பதவியேற்பு

செய்திப்பிரிவு

வடக்கு மாகாண முதல்வராக, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சி. வி. விக்னேஸ்வரன் (73) வரும் 7-ம் தேதி (திங்கள்கிழமை) கொழும்பு நகரில் பதவியேற்கிறார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்ட மைப்பு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் 11ம் தேதி பதவி ஏற்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இலங்கை உச்ச நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் விக்னேஸ்வரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் அவர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அதிபர் ராஜபட்சவை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து விக்னேஸ்வரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக ராஜபட்ச ஒப்புக்கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டணைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று அதிபரிடம் அவர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.

மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் மாகாண ஆளுநராக உள்ள ஜி.ஏ.சந்திராசிரி என அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சேபம் தெரிவித்தது.. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்த பாதுகாப்புப் படைகளுக்கு தளபதியாக செயல்பட்டு துருப்புகளை வழிநடத்தியவர் மாகாண ஆளுநர். எனவே அவரிடம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள தமிழ் தேசிய கூட்டணிக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க வடக்கு மாகாண சபை தேர்தல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்றது.

மொத்தமுள்ள 38 இடங்களில் 30ல் வெற்றி பெற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு. சுயாட்சி உரிமை, கூடுதல் அதிகாரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிட்டது.

இந்த கூட்டமைப்பின் சுயாட்சி கோரிக்கையானது. பிரிவினைவாதத்தை மீண்டும் ஊக்கப்படுத்துவதாக அமையும் என்று இலங்கை தேசியவாத கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

SCROLL FOR NEXT