சிங்கப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட லிட்டில் இந்தியா பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, போலீஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் பொது ஒழுங்கு (தற்காலிக) சட்டத்தை அந்நாட்டு அரசு இயற்றி உள்ளது.
இந்த சட்டம் இப்பகுதியில் மட்டும் ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இந்த புதிய சட்டமானது, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொது ஒழுங்கு (தடுப்பு) சட்டத்தைவிட குறைவான அதிகாரம் கொண்டதாகும். கலவரத்தின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும், தேவைப்பட்டால் ராணுவத்தை அழைக்கவும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அதிகாரம் உள்ளது.
புதிய சட்டத்தின்படி, கலவரத்துக்குக் காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் நடத்தை பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என கருதினால், அவர்கள் லிட்டில் இந்தியா பகுதிக்குள் நுழைவதற்கு போலீஸார் தடை விதிக்கலாம் அல்லது அனுமதிக்கலாம். சந்தேகத்தின் அடிப்படையில் எந்த ஒரு வாகனம், தனி நபர் அல்லது இடத்தில் சோதனை செய்யலாம்.
ஒரு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து, லிட்டில் இந்தியா பகுதியில் மது விற்கவும் சப்ளை செய்யவும் குடிக்கவும் இந்த சட்டம் தடை விதிக்கிறது. மது விற்பனை உரிமை பெற்றவர்கள் தடையை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.
கலவரத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி பேருந்து மோதியதில் இந்தியர் ஒருவர் இறந்தார். இதைக்கண்டித்து இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் 43 போலீஸார் காயமடைந்தனர். 24 அவசர உதவி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளில் சிங்கப்பூரில் இதுபோன்ற கலவரம் நடைபெற்றதே இல்லை.
இதுதொடர்பாக 23 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.பன்னீர் செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.