ராணுவத்தின் கனரக போக்குவரத்துக்கு பயன்படும் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் அவசர காலத்தில் போர்க்களத்துக்கோ அல்லது அமைதி காப்பு பணிக்கோ வீரர்கள், தளவாடங்கள், இதர முக்கிய பொருள்களை உரிய நேரத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இந்திய ராணுவத்தின் திறன் மேம்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் விற்கப்பட உள்ள இந்த விமானத்தின் விலை ரூ.2,380 கோடி. இதில் ஏவுகணை எச்ச ரிக்கை வசதி, வரும் விமானங்கள், படைகள் அல்லது கப்பல்கள், நட்பு நாட்டுடையதா அல்லது எதிரியை சேர்ந்ததா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஒரு அறிவிக்கை யில், “அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை கருத்தில் கொண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்திய ராணுவத்தின் இப்போதைய மற்றும் எதிர்கால கனரக விமான போக்குவரத்து திறன் மேம்படும். இந்திய ராணுவம் ஏற்கெனவே சி-17 ரக விமானத்தை இயக்கி வருகிறது. எனவே, புதிதாக விற்கப்பட உள்ள விமானத்தை இயக்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது.
இந்த விமானம் வீரர்கள், சரக்குகள் உட்பட மொத்தம் 77,520 கிலோ வரையிலான பாரத்தைச் சுமக்கும் திறன் கொண்டது. இயற்கைப் பேரிடர் அடிக்கடி நிகழக்கூடிய பிராந்தியத்தில் இந்தியா அமைந்துள்ளது. எனவே, இயற்கைப் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபி மான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவி செய்வதற்கு இந்த விமானம் மிகவும் உதவி யாக இருக்கும்” என கூறப் பட்டுள்ளது.