கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மூலமாக பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களின் ரகசியத்தை பாதுகாத்திட உத்தரவாதம் வழங்கும் வகையில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர பிரேசில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, பிற நாடுகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டுத் தலைவர்களின் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்கா ரகசியமாக கண்காணித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பிரேசில் அதிபர் தில்மா ரெளசெப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
அமெரிக்கா கையாண்ட உளவு வேலை, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அதன் நட்பு நாடுகளை கோபப்படுத்தி உள்ளது. இந்நிலையில், மின்னணு சாதனங்கள் மூலமான தகவல் பரிமாற்றங்களின் ரகசியத்தை காத்திட ஐ.நா. மூலமாக தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கையில் பிரேசிலும் ஜெர்மனியும் முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதில் உள்ள வாசகங்கள் அமெரிக்காவை புண்படுத்தும் வகையில் இருக்காது என ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தின் முன் வடிவு ஒரு வாரத்துக்குள் சமூக, கலாசார, மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஐநா பொதுச் சபையின் துணைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும். நவம்பர் இறுதி்க்குள் ஐநா பொதுச்சபையின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது யாரையும் கட்டுப்படுத்தாது. போன்களை ஒட்டுகேட்பது, கம்ப்யூட்டர் மூலமான தகவல் பரிமாற்றங்களை ரகசியமாக பதிவு செய்வது போன்ற அமெரிக்காவின் செயல்களை ஏற்க மாட்டோம் என்பதை தெரிவிப்பதற்கே பயன்படும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவிடம் விளக்கம் கோர முடிவு ஒட்டுகேட்பு புகார் தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்பது என்கிற புதிய நடவடிக்கையில் ஜெர்மனியும் பிரான்ஸும் இறங்கியுள்ளன. மேலும் உளவு தகவல் சேகரிப்பில் முழுமையான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை ஆராயவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
'அமெரி்க்காவுடன் எட்டப்படும் இந்த ஒப்பந்தம் டிசம்பரில் நடைபெறும் அடுத்த ஐரோப்பிய கட்டமைப்பு மாநாட்டில் தாக்கல் செய்யப்படும்' என்றார் மெர்க்கல். பிரெஞ்சு அதிபர் பிராங்காய் ஹொலாந்த் கூறுகையில், எதிர்கால உளவுத்தகவல் சேகரிப்பில் ஒத்துழைப்புக்கான ஆலோசனைகளை கண்டறிவதும், அமெரிக்காவின் உளவு, ஒட்டு கேட்பு வேலைக்கு முடிவு கட்டுவதுமே இரு நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சியின் நோக்கம்.
இதுவரை தான் நடத்திய ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றியும் எதிர்காலத்தில் எப்படி நடக்கப்போகிறது என்பதையும் அமெரிக்கா விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்றார் ஹொலாந்த். தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவுத்தகவல் திரட்டும் வேலை, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு எல்லையின்றி தொடர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.