கலவரத்தில் ஈடுபடுபவர்களை எளிதாகக் கலைக்க அவர்களின் மூளையை தாக்கி, பயந்து அலறவைக்கும் சைரன் கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் இங்கிலாந்து போலீஸார்.
கூம்பு வடிவத்தில் இருக்கும் இந்த கருவியை கலவரக் காரர்களை நோக்கி திருப்பினால் போதும், கலவரக்காரர்கள் நிலைகுலைந்து போவார்கள். கலவரக்காரர்களின் மண்டைக் குள் சைரன் சத்தம் பயங்கரமாக ஒலிக்கும். மற்றவர்களுக்கு சாதாரண சத்தமாக இருக்கும் இது, இந்தக் கருவி யாரை நோக்கி இருக்கிறதோ அவர்களுக்கு பயங்கரமாக இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் சைரன் சத்தம் வாந்தி, மயக்கத்தையும் ஏற்படுத்தி விடும். காதைப் பொத்தினாலும் மண்டைக்குள் சத்தம் கேட்பது நிற்காது.
மெகாபோன் போல போலீஸார் இதை கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளலாம். 400 மீட்டர் தொலைவில் இருக்கும்போதே, இந்த சவுண்ட் பிளாஸ்டர் கருவியை இயக்கினால் போதும். லேசர் லைட் வசதி இருப்பதால், ஆளைக் குறிவைத்து திருப்பலாம். இதில் இருந்து கிளம்பும் 115 டெசிபல் ஒலிக் கற்றை மூளையை கலக்கி விடும். கலவரக்காரர்கள் சத்தமில்லாமல் இடத்தை காலி செய்து விடுவார்கள்.
“இது சாதாரண கருவி இல்லை. பார்க்க வேடிக்கைத் துப்பாக்கி மாதிரிதான் இருக்கும். ஆனா அனுபவிச்சாதான் தெரியும். மண்டைக்குள்ள ஏதோ குடையுற மாதிரி இருக்கும். கொஞ்ச நேரத்துல வாந்தி வர்ற மாதிரி இருக்கும். எப்படா அந்த இடத்த விட்டு போவோம்னு ஆயிரும்” என்கிறார் இந்த சவுண்ட் பிளாஸ்டர் கருவி சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒருவர்.
கலவரத்தை ஒடுக்க இதுபோன்ற நவீன கருவிகள் அவசியம். கலவரம் நடக்கும் இடத்தில் தேவையில்லாமல் கூடும் கூட்டத்தை கலைக்க இது மிகவும் உதவும் என்கிறார்கள் போலீஸார். லத்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா, கண்ணீர் புகை குண்டு போன்ற வழக்கமான உத்தியை விடவும் இதுதான் அருமை என்கிறார்கள் இவர்கள்.
இந்தக் கருவியை பயன்படுத் தும்போது, கலவரக்காரர்களின் கவனத்தை எளிதில் திசை திருப்ப முடியும். இதனால் பிணைக் கைதிகளை மீட்கும் பணிகளிலும் இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் இந்தக் கருவியை தயாரித்த பிரிட்டனை சேர்ந்த செர்பெரஸ் பிளாக் நிறுவன அதிகாரிகள். - மெயில் ஆன்லைன்.