இலங்கை உள்நாட்டுப் போரில், ராணுவத்தின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்காவிடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது" என்றார் நிஷா பிஸ்வால்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கையில் வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால் ஐ.நா. தலைமையிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக்கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.
2009ல், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், சிங்கள ராணுவத்தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள்ளார்.