அமெரிக்காவின் அடுத்த அதிபரா வதற்கு உண்மையிலேயே தகுதி யானவர் ஹிலாரி கிளிண்டன் என்று இப்போதைய அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர் பான 4 நாள் மாநாடு பிலடெல்பி யாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
இந்த மாநாட்டில் மிஷேல் ஒபாமா பேசும்போது, “வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராவதற்கு ஒரே ஒருவருக்கு மட்டும்தான் தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்தான் எனது நண்பர் ஹிலாரி கிளிண்டன். அதிபர் பதவிக்கான பொறுப்புடன் அவர் நடந்துகொள்வார் என்று நம்புகிறேன்” என்றார்.
குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் குறித்து அவரது பெயரைக் குறிப்பிடாமல் மிச்செலி பேசும் போது, “எனது கணவரும் அதிபருமான பராக் ஒபாமாவின் பிறப்பு பற்றி முன்பு ஒருவர் கேள்வி எழுப்பினார். இதை எல்லாம் மறந்து விடுவோம். வரும் தேர்தலில் மட்டுமல்லாமல் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக் கும்போது, வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், இடது சாரியா, வலதுசாரியா என பார்க் காதீர்கள். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் சக்தி யாருக்கு உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்” என்றார்.
பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு
உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸும் பகைமையை மறந்து ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் சாண்டர்ஸ் பேசும்போது, “ஹிலாரி கிளிண் டனின் புதிய யோசனைகள் மற்றும் அவரது தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த அதிபராவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார்.