ஐரோப்பிய நாடுகளில், அதன் தலைவர்கள் போன் மூலம் நடத்திய லட்சக்கணக்கான தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பானது (என்எஸ்ஏ) ரகசியமாக ஒட்டுகேட்டதாக வெளியான செய்திகளை அந்த அமைப்பின் தலைவர் கேத் அலெக்சாண்டர் மறுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அமைப்பானது வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் லே மாண்டே, ஸ்பெயினைச் சேர்ந்த எல் முண்டோ, இத்தாலியின் எல் எஸ்பிரசோ ஆகிய பத்திரிகைகள், ‘ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது போன் மூலமாக நடத்திய லட்சக்கணக்கான தகவல் பரிமாற்றங்களை என்எஸ்ஏ அமைப்பானது ரகசியமாக ஒட்டுக்கேட்டதாக ஆணித்தரமாக கூறுகின்றன. அந்த புகார் முற்றிலும் பொய்யானவை என்று நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின்போது எம்.பி.க்களிடம் கூறினார் அலெக்சாண்டர்.
போர் பகுதிகளிலும் தமது எல்லைக்கு அப்பாலும் உள்ள பிற பகுதிகளிலும் போன் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் ரகசியமாக பதிவு செய்து அவற்றை உளவு அமைப்புக்கு வழங்குகின்றன. இந்த நடவடிக்கையை பிரெஞ்ச் மற்றும் ஸ்பெயின் நாட்டு பத்திரிகைகள் தவறாக புரிந்து கொண்டு தமது நாடுகளில் தேசிய பாதுகாப்பு அமைப்பு உளவு வேலையில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மையில் சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளில் நாங்கள் சேகரித்த தகவல்கள் இவை அல்ல. அமெரிக்காவையும் நேட்டோ நாடுகளையும் பாதுகாப்பது தொடர்பானவை அந்த தகவல்கள் என்று நாடாளுமன்றக் குழு தலைவர் மைக் ரோஜர்ஸ் தலைமையிலான குழுவிடம் தெரிவித்தார் அலெக்சாண்டர்.
கடந்த ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலுமாக என சுமார் 1 மாத காலத்துக்கு பிரான்ஸில் போன் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்ட 7 கோடி தகவல்களையும் ஸ்பெயினில் 6 கோடி தகவல்களையும் என்எஸ்ஏ ரகசியமாக ஒட்டு கேட்டு பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல்கள் பற்றி மைக் ரோஜர்ஸ் எழுப்பிய கேள்விக்கு அலெக்சாண்டர் மேற்சொன்ன பதிலை அளித்தார்.
சிஐஏ அமைப்பின் முன்னாள் ஒப்பந்த அலுவலரான எட்வர்ட் ஸனோடென் அம்பலப்படுத்திய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் செல்போன் தகவல் பரிமாற்றங்களை என்எஸ்ஏ ரகசியமாக ஒட்டகேட்டதாக தெரிவித்தன. இந்த செய்திகள் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
இந்நிலையில் அலெக்சாண்டர் நாடாளுமன்ற குழு முன் ஆஜராகி பேசும்போது அமெரிக்காவிலோ அல்லது வெளிநாட்டிலோ செயல்பட்டாலும் நமது வெளிநாட்டு கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளிடம் காட்டும் அணுகுமுறை நாம் நிர்ணயித்துள்ள அதே தரத்தில்தான் இருக்கும். உளவு பார்க்க அவசியம் இல்லை என்று தெரியும்போது அதையும் மீறி ரகசியமாக தகவல்களை திரட்டுவதுதான் தவறானது.
எமது துறை அலுவலர்கள் என்ன செய்தாலும் அதை தெரியப்படுத்துகிறோம். அவர்கள் செய்யும் செயல்களுக்கு அவர்களையே பொறுப்பாக்குகிறோம், வேண்டும் என்றே உத்தரவுகளை மீறி அவர்கள் செயல்பட்டால் அதற்கு அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும் என்றார் அலெக்சாண்டர்.
தேசிய உளவு அமைப்பு இயக்குநர் ஜேம்ஸ் ஆர்.கிளேப்பர் இந்த குழு முன் ஆஜராகி கூறிய விவரம்:
அங்கீகாரமின்றி பல தகவல்கள் அம்பலமானதால், வெளிநாட்டு உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் உள்நாட்டு இன்டர் நெட் ,போன்வழி தகவல் பரிமாற்றக் கண்காணிப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தினோம்.
அமெரிக்க மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை செய்வதற்கு, சட்டங்களுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்டு நாங்கள் செயல்படுகிறோம்.
நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் சுதந்திரத்தையும் கட்டிக்காத்திடவே இந்த பணி. இதை இனியும் தொடர்வோம்.
உளவு பார்க்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லாமல் யாரையும் நாங்கள் உளவு பார்ப்பதோ அவர்களின் போன் பேச்சையோ ஒட்டு கேட்பதில்லை. சில நேரங்களில் நிச்சயமாக எங்கள் தரப்பில் பெரிய அளவிலான தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு மனித தவறுகளும் தொழில்நுட்ப கோளாறுகளுமே காரணம். தவறு நடக்கும்போது அதை வெளியே தெரிவிக்கத் தயங்குவதில்லை.
வெளிநாடுகளில் உளவுத்தகவல் திரட்டும் பணியை குறைத்துக் கொண்டு தனி நபர் சுதந்திரத்தையும் அவர்களின் உரிமைகளையும் மேம்படுத்திட நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்க உளவுத்துறை தயாராக இருக்கிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைள் உள்ளன. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ளச் செய்வது தான் எங்களின் தலையாய பணி என்றார் கிளேப்பர்.