உலகம்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12 மடங்கு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12 மடங்கு அதிகரித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லகார்தே தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லகார்தே பேசியதாவது: “இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்காக அதிகரித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் தனி நபர் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. அமெரிக்காவிலும் இது மிக அதிகமாக காணப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் மேலும் 200 கோடி அதிகரிக்கும். 2020-ம் ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

ஆப்பிரிக்கா, தெற்காசியா பகுதிகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஐரோப்பா, சீனா, ஜப்பான் பகுதிக ளில் வயதானவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.

இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முந்திவிடும். அதே போன்று அமெரிக்காவின் மக்கள் தொகையை நைஜீரியா முந்தி விடும். அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுகள், படைப்புத்திறன், புதுமைகளை புகுத்துவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால்தான் இது சாத்தியமாகும்.

இணையதளம், நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் வரவு போன்றவற்றால் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை முனைப்புடன் பயன்படுத்துவது தொடர்பாக உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT