கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து செய்திகளோ, கட்டுரைகளோ வெளியிடக் கூடாது என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 16-ஆம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் குறித்த செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியாகின. அவர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 'தெஹ்ரிக் இ தாலிபன்' தீவிரவாதிகள் அமைப்பு, பாக். ஊடகங்களுக்கு எச்சரிக்கை வீடியோ பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளது.
அந்த வீடியோவில் தாலிபன் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் பேசும் போது: கடந்த 3 வாரங்களாக பாகிஸ்தானின் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை கண்காணித்து வருகிறோம். சச்சின் டெண்டுல்கர் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரைகளும், தொலைக்காட்சிகளில் சிறப்பு செய்திகளும் தினமும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை இப்படிக் கொண்டாடுவது பாகிஸ்தானுக்கு இழுக்கு. சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் ஐயமில்லை ஆனால் அவரை இப்படிக் கொண்டாட வேண்டாம். அவர் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் மறந்துவிட வேண்டாம்.
அதே வேளையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தோற்றதற்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், அணி வீரர்களையும் பாகிஸ்தான் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளது. சொந்த நாட்டு வீரர்களை இப்படி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.