மலேசியாவில் உள்ள துரித உணவகங் களில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் முஹியிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற உள்துறை அமைச்சகத் துறை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சமீப காலமாக துரித உணவகங்களில் பணிபுரிய உள்நாட்டுத் தொழிலாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம், உணவகம், குப்பைகளை அகற்றுதல், தோட்ட வேலை ஆகிய பணிகளுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையே மலேசியா பெரிதும் நம்பியுள்ளது. குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.
சவுதியில் புதிய கட்டுப்பாடு
இந்நிலையில், சவுதி அரேபியாவில் பணிபுரிய வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே தங்கியிருந்து பணிபுரியலாம் என்ற கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரைவை தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. - பி.டி.ஐ.