சீனாவின் புஜியன் மாகாணத்தை பிடௌ புயல் தாக்கியதையடுத்து, 2 பேர் இறந்தனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதியை பிடௌ புயல் ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதன் காரணமாக, மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன் கடலோரப் பகுதியில் அலைகள் வழக்கத்துக்கு மாறாக பொங்கி எழுந்தன.
இதையடுத்து அப்பகுதியில் கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. புயல் தாக்குதலுக்கு 2 பேர் இறந்தனர். ஜெஜியாங் மாகாணத்தில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த சுமார் 5.74 லட்சம் பேரும் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த 1.77 லட்சம் பேரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தப் புயல் திங்கள்கிழமை காலையில் பியூடிங் சிட்டியின் ஷசெங் டவுன்ஷிப் பகுதியில் கரையைக் கடந்ததாக நானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 23-வது புயல் ஆகும். இந்தப் புயல் கரையைக் கடந்து போதிலும், வடமேற்குப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் மழை தொடர்ந்து பெய்யும். ஆனால் இந்தப் புயல் விரைவில் வலுவிழந்துவிடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
புயல் காரணமாக, ஜெஜியாங் மாகாணத்தில் தைஷுன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காங்னன், வென்செங், பிங்யங் மற்றும் டாங்டூ ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. 35,795 படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என ஜெஜியாங் மாகாண வெள்ளத் தடுப்பு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம் கூறியுள்ளது.
ஜெஜியாங், புஜியான் மற்றும் ஜியாங்சி ஆகி மாகாணங்களைச் சேர்ந்த 35 வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெய்ஜிங், நஞ்சிங், ஷாங்காய், நிங்போ, புசௌ மற்றும் ஜியாமென் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரயில் சேவை முடங்கி உள்ளது.
வென்சூ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட வேண்டிய 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.