உலகம்

வங்கதேச ஆடை தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.4,300

செய்திப்பிரிவு

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற தொடர் போராட்டத்தையடுத்து, தொழிலாளர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ.4,300 (வங்கதேச கரன்சியில் 5,300) வழங்க ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக 7,800 டாகா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்தனர். தொடர் போராட்டம் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. போராட்டத்தின்போது, போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஆடை உற்பத்தியாளர்கள் புதன்கிழமை இரவு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினர் இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை செயலாளர் மிகைல் ஷிபர் கூறுகையில், "தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 4,500 டாகாவாகக் குறைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், அரசின் குறைந்தபட்ச ஊதிய வாரியக் குழுவின் புதிய பரிந்துரையை டிசம்பர் முதல் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார். அதை ஏற்பதாக அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என வங்கதேச ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ரியாஸ்-பின் முகமது நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் கேட்டுக்கொண்டபடி, ஊதிய வாரியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் இப்போது வழங்கும் விலையை 15 சதவீதம் வரை உயர்த்தி வழங்காவிட்டால் மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய குறைந்தபட்ச ஊதியத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும், இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். தாங்கள் வைத்த கோரிக்கையைவிட மிகவும் குறைவாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்ற நாடுகளில் வழங்கப்படும் ஊதியத்தைவிட மிகவும் குறைவு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT