உலகம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்

செய்திப்பிரிவு

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா உள்பட 5 நாடுகள் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்காவுடன் பிரிட்டன், மான்டிநிக்ரோ, மாசிடோனியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளும் இணைந்து இத்தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதன் மீது மார்ச் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மதச் சிறுபான்மையினரான அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், செய்தியாளர்கள் மீதான தாக்குதல், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு அமெரிக்க தீர்மானத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானம் குறித்து இலங்கை தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. எனினும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், ஜெனீவா மாநாட்டில் புதன்கிழமை சிறப்பு அறிக்கையை தாக்கல் செய்வார் என்று கொழும்பு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் பிரிட்டனும் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையைக் கொண்டிருப்பதாக இலங்கை அரசு ஆரம்பம் முதலே குற்றம்சாட்டி வருகிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம் வேண்டும் என்று அந்த நாடு கோரி வருகிறது. அதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT