சிரியா ராணுவம் ரசாயன ஆயுதங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் அந்த நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மேட்டிஸ், முதன்முறை யாக ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 4-ம் தேதி சிரியா ராணுவம் தனது நாட்டு மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து உளவுத் துறை ஆய்வு செய்ததில், இந்த முடிவுக்கு அந்நாட்டு அரசுதான் காரணம் என தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், என்ன செய்வது என்பது குறித்து ஆலோ சனை நடத்தி வருகிறோம். குறிப் பாக, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த சுமார் 100 ஆண்டு களாக சர்வதேச அளவில் தடை நீடிக்கிறது. இதுகுறித்து எங்கள் நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
சிரியா தொடர்ந்து ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்க பதில் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். அதேநேரம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்கள் தாக்குதல் அமையும்.
சிரியா மீதான அமெரிக்க ராணுவ கொள்கையில் மாற்றம் இல்லை. ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்த லாக உள்ளது. எனவே, சிரியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்துக்கட்ட முன்னுரிமை கொடுக்கப்படும்.
எனவே, சர்வதேச சட்டத்தை மீறி சிரியா தொடர்ந்து ரசாயன ஆயுத தாக்குதலை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மன்னிப்பு கோரிய ட்ரம்ப் உதவியாளர்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர், நேற்று முன்தினம் வழக்கம்போல செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருடன் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவருக்கு ஆதரவளித்து வரும் ரஷ்யாவை ஒப்பிட்டுப் பேசினார்.
ஸ்பைசர் கூறும்போது, “இரண்டாம் உலகப் போரின்போது நாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. ஏன் உலக மக்கள் அனைவராலும் வெறுக்கத்தக்க ஹிட்லர் கூட பொதுமக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை” என்றார். இவரது இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சியினரும் யூதர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சில மணி நேரங்களிலேய ஸ்பைசர் மன்னிப்பு கோரினார். அவர் கூறும்போது, “சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ராணுவம் பொதுமக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது. இந்தக் கொடுமையான பேரழிவை தவறுதலாக பொருத்தமற்ற வகையில் ஒப்பீடு செய்துவிட்டேன். இதற்கு ஒப்பீடே இல்லை. இதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.