உலகம்

யாழ்ப்பாணத்தில் கேமரூன்

செய்திப்பிரிவு

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பலாலி விமான நிலையத்துக்கு அன்டனோவ் ரக விமானம் மூலம் வந்திறங்கிய அவர், கார் மூலம் யாழ்ப்பாணம் பொது நூலகம் சென்றார்.

அங்கு வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து தற்போதைய வடக்கு மாகாண நிலவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் நேரடியாக உதயன் நாளிதழ் அலுவலகத்துக்கு கேமரூன் வந்தார். அங்கு, இலங்கை ராணுவத்தால் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி எரிக்கப்பட்ட அச்சிடும் எந்திரங்களை பார்வையிட்டார். இந்தச் சம்பவத்தின்போது ஒரு சில ஊழியர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாளிதழின் நிர்வாக இயக்குநர் சரவணபவன், தலைமை ஆசிரியர் கானமயில்நாதன் ஆகியோரிடம் சம்பவத்துக்குக் காரணமான அம்சங்களை கேமரூன் விசாரித்து அறிந்தார். பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு, சபாபதிப் பிள்ளை நலன்புரி மையத்துக்கு அவர் சென்றார். அங்கு ராணுவத்திடம் நிலங்களைப் பறிகொடுத்த மக்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

23 ஆண்டுகளுக்கு முன் தங்கள் நிலங்களைப் பறித்துக்கொண்ட ராணுவம் அவற்றைத் திரும்பத் தர வேண்டும் என அவர்கள் கேமரூனிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் பலாலி சென்ற கேமரூன், அங்கிருந்து கொழும்பு சென்றார்.

கெலும் மக்ரே

போர்க் காலத்தில் இலங்கையில் நடந்த சம்பவங்களை அவ்வப்போது சேனல் 4 மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவரும் கெலும் மக்ரே, கேமரூனுடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

வியாழக்கிழமை அனுராதபுரம் சென்ற மக்ரே, அரசு சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தால் கொழும்பு திரும்பினார். அவர், தான் பயன்படுத்திய வாடகைக் காருக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என அவரை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் போலீஸில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில், அடுத்த நாளே அவர் கேமரூனுடன் வந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

SCROLL FOR NEXT