உலகம்

குவீன்ஸ்லாந்தை போர்க்களம் போல் ஆக்கிச் சென்ற டெபி புயல்: 48 மணி நேரத்தில் 1,000 மிமீ மழை

ஏஎஃப்பி

பயங்கரப் புயல் டெபியின் கோரத்தாண்டவத்தினால் வடக்கு ஆஸ்திரேலியாவின் நகர்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

குவீன்ஸ்லாந்து கடற்கரைப் பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டுச் சென்ற டெபி புயல் காற்றால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிப்பதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவீன்ஸ்லாந்து மாகாணத்தின் போவென் மற்றும் ஏர்லி பகுதிக்கு இடையே நேற்று டெபி புயல் கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 270 கிமீ காற்று, கனமழை தாக்கியது, காற்றில் கட்டிடக் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.

அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அது குறைந்து விட்டாலும் தாக்கம் அது தீவிர மழையாக தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுவரை இல்லாத, வரலாறு காணாத அளவுக்கு 48 மணி நேரத்தில் 1,000மிமீ மழை (39 இஞ்ச்) இப்பகுதிகளை மூழ்கடித்துள்ளது, அதாவது 6 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 48 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்துள்ளது.

போவன், ஏர்லி பீச் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வழியில்லை, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 60,000 வீடுகள் மின்சாரம் இன்றி கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இவ்வளவு கோரத்தாண்டவத்திலும் உயிரிழப்புகள் இல்லை. சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த சம்பவம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

கன மழை காரணமாக அங்குள்ள நதிகளில் அபாய எல்லையைத் தாண்டி நீர் ஓடிக்கொண்டிருக்கிறது, வெள்ள பாதிப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கானோரை அரசு வெளியேற்றியதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குவீன்ஸ்லாந்தின் பிரபல கடற்கரைச் சுற்றுலாத்தலங்கள் போர்க்களமாகக் காட்சியளிப்பதால் நிச்சயம் சீர் செய்த பிறகே மீண்டும் சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT