நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வணிக வளாகத்தை பயங்கரவாதிகள் பிடியிலிருந்து மீட்கும் பணி முடிவுக்கு வந்ததாக கென்யா அதிபர் உகுரு கென்யாட்டா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வளாகத்தில் இருந்த 61 பேரும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேரும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
சோமாலியாவில் அல் காய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்பிரிக்க யூனியன் படைகளுடன் இணைந்து கென்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக, அல் ஷபாப் பயங்கரவாதிகள், கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் பெரு வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து4 நாள்களாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதல் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து கென்யா அதிபர் உகுரு கென்யாட்டா கூறியிருப்பதாவது: வணிக வளாகத்தில் புகுந்த எதிரிகளை வீழ்த்திவிட்டோம். பயங்கரவாதிகளில் 3 பேர் அமெரிக்கர்கள் என்றும், ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்த பெண் என்றும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.
இதற்கிடையேஅல் ஷபாப் இயக்கம் சார்பில் டுவிட்டர் இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: "பழிவாங்கும் நடவடிக்கை யாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டோம். சோமாலி யாவிலிருந்து கென்யா தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெறாவிட்டால், தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்" என்று எச்சரித்துள்ளனர்.