லாரி கூட்டத்துக்குள் நுழையும் முன், அதை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், லாரிக்குள் நுழைய முயன்றதாகவும், அது முடியாமல் சக்கரத்தின் நடுவே விழுந்துவிட்டதாகவும், நீஸ் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.
நீஸ் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஜெர்மன் பத்திரிகை யாளர் ரிச்சர்ட் குட்ஜார் (42) கூறியதாவது:
பிரான்ஸ் தின கொண்டாட்டங் களை வேடிக்கை பார்ப்பதற்காக, கடற்கரை அருகே உள்ள கட்டிடத்தின் பால்கனியில் வசதி யாக நின்றிருந்தேன். மக்கள் எப்படி ஆரவாரமாக கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக அங்கு நின்றேன். அதே சமயத்தில் கூட்டத்தின் உள்ளே திடீரென ஒரு லாரி நுழைந்ததையும் பார்த்தேன்.
திடீரென அந்த லாரி ஆச்சர்யப் படும் அளவுக்கு மெதுவாக நகர்ந்தது. அதனை, மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மெதுவாக லாரியின் ஓட்டுநர் இருக்கை அருகே வந்த மோட்டார் சைக்கிள்காரர், டிரைவரின் கேபினுக்கு உள்ளே நுழைய முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியாமல், லாரி சக்கரத்தின் இடையே விழுந்துவிட்டார்.
அப்போது, லாரியை நோக்கி 2 போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதையும் காணமுடிந்தது. ஆனால் அதன் பிறகு லாரியை ஓட்டுநர் வேகமாக, அப்படியும், இப்படியும் ஓட்டி கூட்டத்துக்குள் நுழைத்தார். அடுத்த 15 முதல் 20 நொடிகளில் ஏராளமான துப்பாக்கிச் சத்தம் கேட்டன. யார் யாரைச் சுட்டார்கள் எனத் தெரிய வில்லை. கூட்டம் எட்டுத் திசையி லும் சிதறி ஓடியது. என் கண் முன்னாள் 12 சடலங்கள் கிடந்தன என்றார்.