உலகம்

உறைபனியில் சிக்கிய கப்பலை மீட்பதில் சிக்கல்

செய்திப்பிரிவு

அண்டார்க்டிகாவில் உறைபனியில் சிக்கியுள்ள ரஷியக் கப்பலை மீட்கச் சென்ற சீன மீட்புக் கப்பலும் உறைபனியில் சிக்கி நகரமுடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் ரஷியக் கப்பலில் சிக்கியிருந்த 52 பயணிகள் பத்திரமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி எனும் ரஷிய ஆராய்ச்சிக் கப்பலில் 74 ஆய்வாளர்கள் அண்டார்க்டிக் பகுதிக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் தலைநகர் ஹோபர்ட்டிலிருந்து 1,500 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி, எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பல் உறைபனியில் சிக்கியது.

இக்கப்பலை மீட்க சீனாவைச் சேர்ந்த ஸ்னோ டிராகன் எனும் பனி உடைக்கும் கப்பலும், ரஷியாவைச் சேர்ந்த பனி உடைக்கும் கப்பலும் சம்பவ இடத்துக்குச் சென்றன. ஆனால், இக் கப்பல்களால் பனிகளை உடைத்து முன்னேற முடியவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோரா ஆஸ்திரேலிஸ் எனும், பனி உடைப்புக் கப்பல் அப்பகுதிக்குச் சென்றது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அக்கப்பலும் மீட்புப் பணியைத் தொடரமுடியாமல் திரும்பியது.

தற்போது ஆரோரா ஆஸ்திரேலிஸ் கப்பல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்ப அழைக்கப்பட்டு, இயல்பான கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீன பனி உடைப்புக் கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலம் எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தாமதாகத் தொடங்கியது. ரஷியக் கப்பலில் இருந்து பயணிகளை மீட்ட ஸ்னோ டிராகன் கப்பலின் ஹெலிகாப்டர்கள், அவர்களை ஆரோரா ஆஸ்திரேலிஸ் கப்பலில் பத்திரமாகச் சேர்த்தன.

இதுவரை 52 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்னோ டிராகன் கப்பல் சில நாட்களாக ஒரே இடத்தில் நின்றதால், அக்கப்பலும் உறைபனிக்குள் சிக்கிக் கொண்டது. “மிகத் தடிமனான பனி ஸ்னோ டிராகன் கப்பலைச் சூழ்ந்துள்ளதால், அதனால் நகர முடியவில்லை” என ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு மற்றும் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT