பெல்ஜியத்தில் பிரபலமான ஜீஜிட் கஃபேயில் இதுவரை விற்கப்பட்டுவந்த கோகோ கோலா, லேஸ் சிப்ஸ் போன்ற பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுவரும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “ட்ரம்பின் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் எங்கள் கஃபேயில் இனி அமெரிக்கப் பொருட்களை விற்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.
அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாக பெல்ஜியத்திலேயே பானங்களி லிருந்து சிப்ஸ் வரை தயார் செய்யப்படுகின்றன. எங்கள் கஃபேயில் உள்நாட்டுப் பொருட்கள்தான் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் பொருட்களை வாங்கலாம். இல்லாவிட்டால் வேறு இடங்களை நாடலாம். அதற்காக எங்கள் கருத்துகளை நாங்கள் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. எங்களின் புறக்கணிப்பு அமெரிக்காவையோ, ட்ரம்ப்பையோ எட்டுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எட்டுமா, எட்டவில்லையா என்பது முக்கியமில்லை. நாங்கள் அநீதிக்குத் துணை போகவில்லை என்பதில் நிம்மதியாக இருக்கிறோம். உலகம் முழுவதையும் தன்னுடைய மோசமான வலதுசாரி சிந்தனைகளால் ஒருவர் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது, நாம் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டவேண்டியது அவசியம்.
அமெரிக்கப் பொருட் கள் பலவும் பெல்ஜியத்தில், பெல்ஜியம் தொழிலாளர்களால் செய்யப் பட்டவைதான். அமெரிக்க அதிபர் பதவி விலகிய பிறகோ, அவரது தீவிரவாத கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்போதோ நாங்களும் அமெரிக்கப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்வது குறித்து யோசிப்போம்” என்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான டேவிட் ஜோரிஸ். பெல்ஜியம் செய்தித்தாள்களில் இந்த செய்தி வெளியாகி, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவிட்டது.
அனைவரும் ஒன்று திரண்டு ட்ரம்ப்பை எதிர்க்க வேண்டிய தருணம் இது…
இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது சார்லோட், டிசம்பர் மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குரோமோசோம்கள் குறைபாடுடைய அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குழந்தை. 4 வாரங்களில் உயிரிழந்த குழந்தையை, 16 நாட்கள் தன்னுடன் வைத்திருந்து, அடக்கம் செய்திருக்கிறார் சார்லோட். “முதல் குழந்தை என்பதால் எனக்கும் கணவருக்கும் ஏகப்பட்ட கனவுகள் இருந்தன. 20 வாரங்களில் ஸ்கேன் மூலம் குழந்தைக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் ஏதாவது மேஜிக் நிகழ்ந்து, குழந்தை உயிரோடு இருந்துவிடாதா என்று நினைத்தோம். குழந்தை பிறந்ததிலிருந்து ஏகப்பட்ட குழாய்களுடன் தனியாக இருந்தாள்.
நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி, ஒரு மாதத்தில் எங்களைவிட்டுப் பிரிந்தாள். அவளுடன் சிறிது நாட்கள் செலவிடவேண்டும் என்று முடிவுசெய்தோம். மருத்துவமனையும் அனுமதித்தது. குளிர்சாதன வசதி கொண்ட தொட்டிலில் குழந்தை இருந்தாள். அவ்வப்போது குழந்தையைத் தூக்குவோம், தோளில் போட்டு நடப்போம், தோட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். 12 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்துவந்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு நல்லவிதமாக இறுதிச் சடங்கு நடத்தி, அனுப்பி வைத்தோம். குழந்தையுடன் நேரம் செலவிட முடியாத பெற்றோர், எங்களைப் போல அனுமதி வாங்கிக் குழந்தையுடன் இருக்கலாம்” என்கிறார் சார்லோட்.
நெகிழ வைத்துவிட்டது இந்தப் பெற்றோர் பாசம்!