நியூசிலாந்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
இந்தியரான தருண் அஸ்தானா, நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார். ஓட்டலில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நண்பர்களுடன் கிளப் ஒன்றுக்கு சென்றிருந்த அவர், வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஆக்லாந்து நகரின் மையப் பகுதியில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
தலையில் அடிபட்டு மயங்கி விழுந்த அஸ்தானாவை அங்கிருந்தவர்கள் ஆக்லாந்து நகர மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அஸ்தானா இறந்துவிட்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
அஸ்தானா ஒரு பெண்ணுக்கு உடை வாங்கிக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிரன்வில்லே மேக்பார்லேண்டை (27) போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவரை இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.