சிரியாவில் நடந்து வரும் சண்டையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
அலேப்போ நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸைடான் மற்றும் கலாசா கிராமங்களை கடும் போராட்டத்துக்குப் பிறகு ராணுவ உதவியுடன் ஆட்சியாளர் களுக்கு ஆதரவான படையினர் நேற்று கைப்பற்றினர். அப்போது, அங்குள்ள சிரியாவின் அல்-காய்தா பிரிவான அல்-நஸ்ரா மற்றும் புரட்சிப்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவின் ஜெட் விமானங்களும், அல்-நஸ்ரா முகாம்களை குறிவைத்து வான் வழித் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதல்கள் காரணமாக, அலேப்போ நகரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 70-க்கும் அதிகமானோர் இறந்ததாக, மனித உரிமைப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
சிரியாவின் பொருளாதாரத் தலைமையகமாக திகழ்ந்த அலேப்போ நகரம், 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, போராட்டக் களமாக மாறியுள்ளது. கிழக்குப் பகுதியை புரட்சிப்படையினர் கைப்பற்ற ராணுவத்தின் அதிகாரம் மேற்குடன் சுருக்கப்பட்டது.
கடந்த 2011-ல் ஆட்சியாளர் களுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்த பின்னர், தற்போது வரை, 2.8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.