பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. 'ஹயான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 235 கி.மீ முதல் 275 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 5 இடங்களில் கரையைக் கடந்த ஹயான் பலத்த பொருட் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஹயான் சக்தி வாய்ந்த சூறாவளியாக இருப்பதாகவும், உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி இது தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 1979-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட டிப் சூறாவளி தான் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது நாள் வரை இருந்து வந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.